search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு"

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதிற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா வரவேற்பு அளித்துள்ளார். #SupremeCourt #Congress #SabarimalaVerdict #RandeepSurjewala
    புதுடெல்லி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10-50 வயது வரையுள்ள பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும், அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கவேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்று உள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில், “சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு முற்போக்கான மற்றும் பரவலாக வரவேற்பை பெறக்கூடியது ஆகும். இதை காங்கிரஸ் முழு மனதுடன் வரவேற்கிறது. பாலினத்தின் அடிப்படையிலோ அல்லது வேறுவிதமாகவோ பெண்களுக்கு பாகுபாடு காட்டக் கூடாது என்பது தீர்ப்பில் மிகத் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.



    “சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெண்களின் உரிமைகள் மீதான புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெண்களை மதச்சம்பிரதாயத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஒரு சமுதாயம் பரிணாம வளர்ச்சி காணும்போது அதற்கேற்ப மத நம்பிக்கைகளும், சட்டங்களும் அதே போன்ற வளர்ச்சியை காண வேண்டும்” என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.  #SupremeCourt #Congress #SabarimalaVerdict #RandeepSurjewala
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அற்புதம்மாள் கூறியுள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #SC
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று இருக்கிறார். வண்டலூர் ஓட்டேரி இல்லத்தில் அவரை தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இது குறித்து பேரறிவாளனின் தாயார் நிருபருக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:-பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை சம்பந்தமாக முடிவு எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருக்கிறதே?

    பதில்:-இப்போது தான் கேள்விப்பட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. 27 ஆண்டு காலம் நடந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை முடித்து வைத்து இருக்கிறது. மாநில அரசுக்கு முழு உரிமை இருக்கிறது என்பதை நீதிபதிகள் உறுதி செய்து இருக்கிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மேலும் சிறையில் வைக்க வேண்டாம், வெளியே விட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறார்கள்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதை கருத்தில் கொண்டு, கவர்னரிடம் ஆலோசனை செய்தோ அல்லது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை போல் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியோ என் மகன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே வேண்டுகோள். இந்த விஷயத்தில் இனியும் கால தாமதம் செய்யக்கூடாது.

    கேள்வி:- முதல்-அமைச்சரை சந்தித்து, அவர்களின் விடுதலை குறித்து நேரில் வேண்டுகோள் விடுக்க இருக்கிறீர்களா?

    பதில்:- இந்த தீர்ப்பின் முழு விவரம் வந்ததும் நான் முதல்-அமைச்சரை சந்திப்பேன். நாளைக்கு (இன்று) போகலாம் என்று நினைக்கிறேன். தீர்ப்பின் முழு விவரம் வேண்டும், மனு தயார் செய்ய வேண்டும் அல்லவா?. வக்கீல்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கேட்டு மனு தயார் செய்ய வேண்டும்.

    கேள்வி:-இந்த தருணம் உங்களுக்கு எப்படி உள்ளது?

    பதில்:-நம்பிக்கையாக இருக்கிறதுப்பா...

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.  #RajivCaseConvicts #Perarivalan #SC

    கவர்னர் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சொல்லி இருக்கும் தகவல்களை வைத்து பத்திரிகைகளில் வெளியான செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்னர் கிரண்பேடி இணைத்து வெளியிட்டுள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
    புதுச்சேரி:

    நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், புதுவை-டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டசபை செயல்படுகிறது.

    ஆனால், இவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று கூறி புதுவை கவர்னர் கிரண்பேடி, டெல்லி கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

    இந்த தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுவைக்கும் பொருந்தும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் கவர்னர் கிரண்பேடி இனிமேலும் இதை மீறும் வகையில் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொட ரப்படும் என்றும் கூறினார்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி நேரடியாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நேற்று கூறப்பட்ட தீர்ப்பு புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி இருக்கிறது.

    அதாவது டெல்லி மாநிலம் அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்கள் 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது.

    எனவே, இப்போதைய தீர்ப்பு 239 ஏ.ஏ. பிரிவின் அடிப்படையில்  கூறப்பட்டுள்ளது. இதனால் புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

    எனவே, டெல்லி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா? என்ற கேள்வி எழுந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இது சம்பந்தமாக சொல்லி இருக்கும் தகவல்களை வைத்து பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

    அந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்னர் கிரண்பேடி இணைத்து வெளியிட்டுள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

    சக ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். #SupremeCourt
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலம், அவுரங்காபாத்தில் கல்வி இயக்குனரகத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர், மேலதிகாரி தன்மீது அதிக பணிச்சுமையை சுமத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி, சம்மந்தப்பட்ட அதிகாரி தன் கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசில் புகார் செய்து, அதன்கீழ் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 306-ன் கீழ் வழக்கு பதிவானது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அந்த அதிகாரி மும்பை ஐகோர்ட்டை நாடினார். ஆனால் அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், சக ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில், “ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுமென்றே திட்டமிட்டு இருந்தால் அது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 306-ன் கீழ் குற்றம்சாட்ட வாய்ப்பு உண்டு.

    ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரையில், கூறப்பட்டு உள்ள தகவல்கள் முற்றிலும் போதுமானவை அல்ல. மேலதிகாரி, ஊழியருக்கு சில வேலைகளை செய்யுமாறு பணித்தார் என்பதாலேயே குற்ற மனம் அல்லது தீய நோக்கம் இருந்தது என எடுத்துக்கொள்ள முடியாது” என கூறப்பட்டு உள்ளது. 
    ×